
படிகம் விழி..
பவளம் முகம்..
பருத்தி நிறம்..
பால் நிலா..
நீயடி...
பூக்களின் குவியல்களுக்குள்
தொலைந்து போன..
புத்தம் புது
தும்பைப்பூ நீயடி..
"தேன்கூட்டில் தேன் ஊரும்"..
உன் பார்வைகளை பாராது போன
யாரோ சொன்ன வாக்கியம் இது..
செல்லாது செல்லாது...
உன் புதிய படங்களை பார்த்தநொடி..
உன்னை எழுதவே விரல்கள் விரையும்..
நில்லாது நில்லாது..
நீ பார்க்கத்தான் செய்கிறாய்..
உன் சிறு சிறு பார்வைகள்
இதயங்களில் பாத்தி கட்டி
மின்னல் பூக்களை
விதைத்து செல்கிறது..
நீ பார்க்கத்தான் செய்கிறாய்..
உன் குறு குறு பார்வைகள்
நெஞ்சோரம் நயாகராவை
பொழிந்து ஓர் வானவில்லை
கிறுக்கி செல்கிறது..
இதயங்களை
இயற்கை காட்சியாய் மாற்றுகிறாய்..
காகிதங்களில்
கற்பனைகளை ஓயாது ஊற்றுகிறாய்..
இதய வாசலில்
உன் விழிகள் போடும்
அழியா மாக்கோலங்கள்..
பிரபஞ்ச கூச்சலில்
உன் மௌனம் சொல்லும்
மாய வர்ண ஜாலங்கள்..
மில்லியன் நினைவுகளை கோர்க்க
உன் மில்லிமீட்டர் புன்னகை போதும்..
உன் இதழ் எழுதும் சிரிப்பினில்
ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாயும்..
கடலோரம் நதி சேரும்..கரையோரம் ஈரம்..
விரல் தாங்கும் கன்னத்தில்..இல்லை பாரம்..
பூமுகம் ஏந்தும் காந்தள் விரல்கள்..
காணும் போதே கவிதை பூக்கள்..
உன் விழிகள் பேசும்
பாஷைகளை மொழிபெயர்த்தால்..
வெற்று காகிதங்கள் கடிதங்களாக நீளும்..
புறாக்களின் காலில் ஓலைகளாக மாறும்..
மைல் தாண்டி ஓர் நாள் உனை வந்து சேரும்..
படிப்பாயோ இல்லையோ..
தெரியாது..
பிடிக்குமோ இல்லையோ..
புரியாது..
உனை மட்டுமே எழுத சொல்லி
கட்டளை இடுகிறது
என் தானியங்கி இதயம்..
உன் புதிய படங்கள்..
விடிந்து விட்ட இரவுகளின்
கனவுகளை நீளச்செய்யும்..
எப்படி சொல்ல..ம்ம்..
கண்ணுக்கு மேலே நீளும்
உன் புருவங்கள் போல்..
உன் புதிய படங்கள்..
வந்து விட்ட விடியல்களின்
வெளிச்சங்களை மெல்ல வெல்லும்..
எப்படி சொல்ல..ம்ம்..
உன் முகத்தில் படர்ந்து கிடக்கும்
வெள்ளரி நிறம் போல்..
அழகாய் நித்தம் வருகிறாய்,,
தடயம் இல்லா கொலைகளை
தயக்கமின்றி புரிகிறாய்..
இயங்க மறந்த இதயங்கள் சாட்சி..
அழகாய் நித்தம் வருகிறாய்..
விடயம் இல்லா வினாக்களை
விழிகளாலே வரைகிறாய்..
இமைக்க மறந்த இமைகள் சாட்சி..
படிகம் விழி..
பவளம் முகம்..
பருத்தி நிறம்..
பால் நிலா..
நீயடி..
No comments:
Post a Comment