நீ குளித்தால் நீருக்கும் காய்ச்சல் வரும்


கண்ணாடி நிலவொன்று
நீருக்குள் விழுந்ததோ..
கரை சேர மனமின்றி
கண்ணாலே சிரித்ததோ..

நீல அலைகள் சூழ்ந்த
செந்தீவு நீயே..

முகத்தின் துளிகளை
துடைத்துவிடு..
நிலவில் அடைமழை என..
விண்வெளி ஆராய்ச்சி
அறிக்கை வெளியிடும்..

இமைகளின் துளிகளை
காயவிடு..
மின்சார இழைகளில் நீர்த்தேக்கம் என
மின்சார வாரியம்
புகார் கொடுக்கும்..

பச்சை உகிர் அணிந்து..
நான் அழகா..என்று
விரல்களால் கேள்விக்குறி
இடும் வினாத்தாள் நீ..

நீ...
துளியே துளியே
சிரிக்கும் மழைத்துளியே..

நீ..
விழியே விழியே
மெல்ல பேசும் விழியே..

நீ..
அழகே அழகே
மனசெல்லாம் பொழியும் அழகே...

எங்கே நீ எங்கிருக்கிறாய்..
நதிக்குள் நிலவாய் கிடக்கிறாய்..

எங்கே நீ எங்கிருக்கிறாய்..
நெஞ்சுக்குள் நினைவாய் மிதக்கிறாய்..

எங்கே நீ எங்கிருக்கிறாய்..
காகிதத்தில் கவிதையாய் பிறக்கிறாய்..

நீலநீர்..நீளவானம்..
துளிகளின் நுரை..வெண்மேகம்..
அங்கே உதித்துவிட்ட..
செங்கதிர் நீ..

வெண்ணிலவின் முகம்
செங்கதிரோன் நிறம்
அதிசய கலவை நீ..

நீண்ட நேரம் நனையாதே..
டிகிரி 100 தாண்டும்
இதயங்கள் பாவமே..

இதழ் சேரா சிரிக்காதே..
இடைவெளியில் சிக்கி
நெஞ்சங்கள் நோகுமே..

கயல் என்றால் நீருக்குள் நீந்தவே..
காண்போர் கண்களை
களவாடி செல்லும் கயல் இங்கே..
இங்கே மட்டுமே..

பளிங்கு கல் எறிந்தால்
மூழ்கியே போகும்..
வெண்பனி நீ..
ஆதலால் மூழ்க மறுத்தாய்..
நெஞ்சோரம் கரைந்து சிரித்தாய்..

உன் ஒரு துளி புன்னகை..
இங்கே கவிதை பேரலை..
உனக்காக உனக்காக மட்டுமே..

No comments:

Post a Comment