
இயற்கையில் இன்று
தங்க ஜரிகைகளை
கொட்டியது யாரோ ?
மின்னல் இன்றி
கொஞ்சும் சிரிப்பால்
இதயங்கள் வெட்டியது யாரோ ?
தங்க நிறமே..தங்க நிறமே..
சிறு பொட்டும் உன் நிறமே..
கண்ணுக்கு புலப்படாது போனால்
நட்சத்திரத்தின் அழகு குறையுமோ ?
உன் விழியில் மட்டுமே..
உன்னில் மட்டுமே..
நேசங்கள் நிறையுமோ ?
ஹைக்கூ விழியினில்
ரசிக இதயங்களை
தூக்கில் இடுகிறாய்..
தூக்கணாங்குருவி சிகையினில்
நொடியில் நினைவுகளை
முடிந்து விடுகிறாய்..
தங்கத்தேரும் தவமிருந்ததோ..
காதோரம் ஊஞ்சலாட..
தெளிதேனும் தேடி வந்ததோ
விழியோரம் விளையாட..
வளை அழகா..மோதிரம் அழகா..
நதிக்கரையில் பூக்களும் காற்றும்
ரகசிய உரையாடல்..
நீரில் பூக்கும் தாமரை
உன் விரலில் பூக்கும் போது
வாட மறுக்கின்றது..
வானில் வளையும் வானவில்
உன் கையில் வளையும் போது
மறைய மறக்கின்றது..
நதியும் ஜதி பாடும்..
நீளும் புருவங்கள் சொல்லிச்செல்கின்றன..
உன் இருவிழி..புதைகுழி..
என் கவிதைகள் மெல்லச்சாகின்றன..
காகிதத்தில் வழுகி விழுந்த
தங்க நிலவு நீ..
கற்பனைகளை எடுத்து வந்த
வண்ண தூரிகை நீ..
வார்த்தைகள் தொடுத்த தந்த
முல்லை வாசம் நீ..
உன் விழிப்பரப்பில்
பயணிக்கும் போது கவிதைகள் இலவசம்..
அழகின் மொழிபெயர்ப்பை
எழுதும் போது வார்த்தைகள் என் வசம்..
தங்க பதுமையாய் சிரிக்கும் நீ..
சித்திர பாவையாய் பறிக்கும் நீ..
நித்திரை கலைக்கும் கனவென நீ..
மார்கழி முடிந்தும் சிலிர்ப்பென நீ..
கதிரவன் விடிந்தும் நிலவென நீ..
ப்ரியா நீ..என் கவிதைகளின் ப்ரியம் நீ..
No comments:
Post a Comment